சென்னை: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை ஒன்றை இன்று (செப்.2) வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது இல்லை. மாறாக தணிக்கைக்கு பிறகும், முழுமையாக ஆளும் கட்சிக்கு சாதகமாக படத்தொகுப்பு செய்த பிறகும்தான் சபை நடவடிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
இது ஜனநாயக மரபுகளுக்கு உகந்த செயல் அல்ல. ஜனநாயக திருக்கோயிலில் மூலஸ்தானமாகயிருப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடும் சட்டப்பேரவைதான். தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு குடிமகனும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் செயல்பாட்டினை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருப்பார்கள்.
எதிர்க்கட்சியினரின் காணொலி பதிவுகள் இருட்டடிப்பு
ஆகையால் சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தணிக்கை இல்லாது ஒளிபரப்பு செய்தால்தான், சமூக ஊடகங்களும், பொதுமக்களும் ஜனநாயகத்தின் சாட்சிகளாக பேரவை நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும்.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி ஊடகங்களின் வழியாக பார்ப்பவர்களுக்கு, அதை வெட்டியும், ஒட்டியும், பகுத்தும், தொகுத்தும் ஆளும் கட்சிக்கு ஆதரவான காணொலி பதிவாக மாற்றக் கூடாது.
எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் கேள்விகளை கேட்கிறார்கள். ஆனால், மாற்றுக் கட்சியினர் கேள்விகள் கேட்பதை சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் காணொலி பதிவுகளில் இருட்டடிப்பு செய்கின்றனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் கொடுக்கும் பதிலுரையை முழுமையாக வெளியிடுகின்றனர்.
மக்களாட்சித் தத்துவத்தை காயப்படுத்தும் காணொலிகள்
இது உலக நியதிக்கு விரோதமான செயலாகும். சில வேளைகளில் இந்தக் காணொலி பதிவுகளை பார்க்கும்போது, ஏதோ அமைச்சர்கள் தாமாக முன்வந்து பேசுவதுபோல பதிலுரையை மட்டும் தொகுத்து, பேச்சுரைகளின் தொகுப்பாக மட்டுமே பதிவுகள் காட்சியளிக்கின்றன.
மாற்றுக் கட்சி உறுப்பினர்களின் கருத்து, பேச்சுக்கள் முழுமையாக நீக்கப்படுகின்றன அல்லது ஆளும் கட்சிக்கு சாதகமான விஷயங்கள் மட்டும் உயர்த்தி காட்டப்படுகின்றன.
மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான தூண்களாக விளங்கும் மக்கள் மன்றத்திற்கு, சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகளை உண்மையாக, முழுமையாக கொடுக்காமல் அங்கங்கே வெட்டுகளோடு கொடுப்பது ஜனநாயகத்தை, மக்களாட்சித் தத்துவத்தை காயப்படுத்துகிறது.
ஆச்சரியப்படுத்தும் ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்கள்
மொத்த ஊடகத் துறைக்கும் கிடைக்காத காணொலி பதிவுகள், ஆளும்கட்சியின் ஆதரவு ஊடகங்களுக்கு மட்டும் சிந்தாமல், சிதறாமல் முழுமையாகக் கிடைப்பது மட்டும் அதிசயம்தான்.
மாநில அரசு உடனடியாக சபையின் மாண்புக்கு ஊறு விளைவிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, உண்மையை உலகிற்கு பேதமில்லாமல், சேதமில்லாமல் கொடுக்கவேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தது.
வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:முதலமைச்சரை சந்தித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி