சென்னை: திமுகவின் முக்கியப் பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை DMK Files என்ற பெயரில் இன்று(ஏப்.14) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில் திமுகவைச் சேர்ந்த 17 பிரமுகர்களின் 1.31 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் திமுகவில் இருக்கக்கூடிய தலைவர்களின் தேர்தல் பிராமணப் பத்திரத்தில் கொடுத்துள்ள சொத்து விவரம், மேலும் தற்போது அவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயரில் இருக்கக்கூடிய சொத்து பட்டியலை வீடியோ வடிவத்தில் தயார் செய்து திரையிடப்பட்டிருந்தது.
இதில் ஒவ்வொரு சொத்துப்பட்டியலை வெளியிடும்போதும் ஏதோ ஒரு ஆவணம் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. இதில் டாஸ்மாக் குறித்து சொத்துப் பட்டியலை வெளியிடும்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆண்டிற்கு ரூ.10,000 கோடி அளவிற்கு வசூல் செய்கிறார் எனக் குறிப்பிடபட்டிருந்தது. இதில் நமது ஈடிவி பாரத் செய்தி குழுமத்தால் கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட சிறப்பு செய்தி இடம்பெற்றுள்ளது. 'டெண்டர் குழப்பம்: தள்ளாடும் டாஸ்மாக் பார்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட சிறப்பு செய்தியை டாஸ்மாக் குறித்த சொத்துப் பட்டியலை வெளியிடும்போது ஆவணமாக மேற்கோள் காட்டியுள்ளனர்.