சென்னை:தமிழக முதலமைச்சரின் கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லாமல், உதயநிதியை துணை முதலமைச்சராக கொண்டுவந்து முதலமைச்சராக்குவதில்தான் இருக்கிறது என சென்னையில் நடைபெற்ற பாஜக செயல்வீரர் கூட்டத்தில் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
எதிர்வரும் நாடளுமன்ற தேர்தலுக்கான, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளுக்கான, செயல் வீரர்கள் கூட்டம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, தமிழக பாஜக அறிவுசார் பிரிவு சார்பாக இன்று (ஜன.12) நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க ஒத்திகை: தென் சென்னை நாடளுமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 'தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். சேலம் திமுக இளைஞரணி மாநாடு முடிந்த பின்னரோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னரோ, எப்படியாவது உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று அதற்கான ஒத்திகைத்தான் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம்.
மேலும், தொடர்ந்து திமுக வானிலை ஆய்வு மையத்தை விமர்சித்து வருகிறது. ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையம், மழை மற்றும் கனமழைக்கான முன்னறிவிப்புகளை வழங்குகிறது. மஞ்சள் எச்சரிக்கை, எப்படி சிவப்பு எச்சரிக்கையாக மாறுகிறது என்பதை இங்கிருப்பவர்களுக்கு படிக்கத் தெரியவில்லை. அடிப்படை விஷயத்தை படிக்கத் தெரியவில்லை. அதை விவரிக்கத் தெரியவில்லை' என்று குற்றம்சாட்டினார்.
படிப்படியாக உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்கும் திட்டம்?: மேலும் பேசிய அவர், 'தமிழகத்தில், குடும்ப ஆட்சி என்பது தமிழகத்தை மொத்தமாக சீரழித்துள்ளது. சிஸ்டம் முழுவதும் கெட்டுப்போய் உள்ளது. மாநிலத்தின் ஆட்சி துவங்கி, மேயர் வரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் வழிமுறையை கெடுத்து இன்று தமிழகத்தை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர். தமிழக முதலமைச்சரின் கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை. அவரது கவனம் அனைத்தும் உதயநிதியை துணை முதலமைச்சராக கொண்டுவந்து முதலமைச்சராக்குவதில்தான் இருக்கிறது.
பின்னர் சென்னை ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ மைதனாத்தில் நடந்த மத்திய சென்னை தொகுதிக்கான செயல்வீரர் கூட்டத்தில் பேசிய அவர், '2026 தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது எனக்கூற, 2024 தேர்தல் முக்கியமானது. நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் 43வது இடத்தில் இருந்த சென்னை 199வது இடத்திற்கு சென்றுள்ளது.
வெறும் 12 சதவீதம் குப்பைகளை மட்டுமே முறையாக அப்புறப்படுத்துகின்றனர். எம்.எல்.ஏ, எம்.பி., கவுன்சிலர்கள் பணியாற்றாமல் உள்ளதால் சென்னையில் வளர்ச்சி இல்லை. இந்தியாவின் மிக முக்கியமான நகரமான சென்னை, நம் கண்முன்னே அழிகிறது. இந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் சென்னை நகரை மாற்றக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும். பாஜக அமைச்சரவையில் உள்ள 75 பேர் மக்கள் பணி ஆற்றக்கூடியவர்கள் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் கடினமாக உழைக்க வேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இதையும் படிங்க: பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு: மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு