சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில், "பொறியியல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளுக்காக, கல்லூரிகள் 18 மாதங்களுக்குப் பின்னர் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.
அப்பொழுது மாணவர்களுக்கான விடுதி வசதிகள் உள்ளதா என்பதைக் கல்லூரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். விடுதி வசதிகள் போதுமான அளவில் இல்லாதவர்கள், எல்லா ஆண்டு மாணவர்களையும் கூப்பிடாமல், சில ஆண்டு மாணவர்களை மட்டும் அழைத்து நேரடி வகுப்புகளை நடத்தலாம்.
விடுதி வசதி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில், தற்போது இளங்கலையில் இறுதி ஆண்டு மாணவர்கள் மட்டுமே அழைக்கிறோம். முதுகலை மாணவர்களையும் நேரடி வகுப்பிற்கு அனுமதிக்கிறோம்.
பிற பொறியியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரியில் உள்ள விடுதி வசதிக்கேற்ப, மாணவர்களை நேரில் அழைத்து வகுப்புகளை நடத்தலாம். ஆராய்ச்சி மாணவர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர்.
கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பதை ஆய்வு செய்யவோம். போடாத மாணவர்களுக்குத் தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் உடல் வெப்ப பரிசோதனை தினமும் சோதிக்கப்படும். விடுதி மற்றும் கல்லூரிகள் முழுமையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தாக்கப் பயிற்சி
பொறியியல் படிப்பில் மாணவர்கள் கடந்த 18 மாதங்களாக நேரடி வகுப்பிற்கு வரவில்லை. எனவே, நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் 10 நாள்கள் மாணவர்கள் கற்கும் திறன் குறித்து ஆய்வு செய்யப்படும்.
அதன் அடிப்படையில் அவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்கும்போது, 15 நாள்கள் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது மாணவர்கள் பொறியியல் படிப்பில் எவ்வாறு படிக்க வேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கான நான்காண்டுகள் படிப்பிற்கான திட்டமிடுதல் குறித்தும் விளக்கப்பட்டு வருகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி வகுப்புகள் நடத்தப்படும் கரோனா வைரஸ் பாதுகாப்பு வழிமுறைகளை அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வர்கள் பின்பற்றி விடுவார்கள்.
ஏற்கெனவே இவர்களுக்கு அதில் போதுமான விழிப்புணர்வு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியில் மட்டுமே இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் நாளை நேரடி வகுப்பிற்கு வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மாதத்தில் தேவையான Project work முடித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி விடுவோம்.
அதன் பின்னர் மூன்றாவது மற்றும் இரண்டாவது ஆண்டு மாணவர்களை கல்லூரிக்கு அழைப்போம். டிசம்பர் மாதத்திற்குள் கரோனா சீரடைந்து விட்டால், அனைத்து மாணவர்களையும் நேரடியாக அழைப்போம்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி வகுப்புகள் நடத்தப்படும்
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசின் வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சில கல்லூரி விடுதியில் இடவசதி இல்லாமல் இருந்தால் அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும். குறிப்பிட்ட அளவு மாணவர்கள் மட்டும் நேரடியாக வந்து படிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பள்ளிகளை கண்காணிக்க 37 அலுவலர்கள் நியமனம்