சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்துக்கிடக்கும் நிலையில், விலை மதிப்பற்ற மருத்துவ இடங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடையும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இளநிலை மருத்துவப் படிப்பில் 15 சதவீதம் இடங்களையும், அரசு மருத்துவக் கல்லூரிகள் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் இடங்களையும் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்க வேண்டும்.
இந்த இடங்களை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நிரப்பும். இரு கட்ட கலந்தாய்வுகளில் நிரப்பப்பட்டவை தவிர மீதமுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் ஒப்படைக்கப்படும்.
2021-22 ஆம் கல்வியாண்டு முதல் கலந்தாய்வு முறையில் மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு மாற்றம் செய்துள்ளது. அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வுகளுக்குப் பதிலாகக் கூடுதலாக இரு கலந்தாய்வுகளைச் சேர்த்து மொத்தம் 4 கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்படும்.
அதுமட்டுமின்றி, இரு கட்ட கலந்தாய்வுகளுக்குப் பிறகு மீதமுள்ள இடங்கள் மாநிலங்களுக்கு மீண்டும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தாலும் கூட அவை யாருக்கும் பயன்படாது, அவை காலியாகவே இருக்கும்.
மத்திய அரசின் இந்த புதிய விதி தான் தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பாக உருவெடுத்திருக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து 825-க்கும் கூடுதலான இடங்கள் வழங்கப்பட்டன.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 4 கட்ட கலந்தாய்வு நிறைவடைந்து விட்ட நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா ஓர் இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த இடங்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்ப ஒப்படைக்கப்படாது என்பதால் அவற்றைப் பயன்படுத்த முடியாது.