தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்கு வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்! - பாமக

Ramadoss issued statement: வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 2:17 PM IST

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,"காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாடிய சுமார் 40,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

கர்நாடகத்தில் இருந்து உரிய காவிரி நீரைப் பெற்றுத் தர தவறியதால் 2 லட்சம் ஏக்கர் குறுவைப் பயிர்கள் கருகி வரும் நிலையில், 40,000 ஏக்கருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருப்பது கண் துடைப்பாக இருக்கிறது.

காவிரியில் தண்ணீர் வராததால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கும், ஏக்கருக்கும் ரூ. 40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டிய தார்மிகக் கடமை தமிழக அரசுக்கு இரு வழிகளில் உள்ளது. முதலாவது, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி 66 டி.எம்.சி தண்ணீர் உள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது. அத்தகைய கடமை தவறுதலுக்காக தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும். இரண்டாவதாக, குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கி இருந்தால், தண்ணீர் இன்றி கருகிய பயிர்களுக்கு காப்பீடு நிறுவனங்களிடமிருந்து ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் இழப்பீடு கிடைத்திருக்கும்.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை நெல்லுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குறுவைக்கு காப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி, குறுவை பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு ஈடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், வெறும் 40,000 ஏக்கருக்கு மட்டும், ஒரு ஏக்கருக்கு ரூ.5,400 இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? இந்த தொகை நடவு நட்ட செலவை ஈடு செய்வதற்குக் கூட போதுமானதல்ல.

ஓரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 வரை செலவு ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்ட போது, அப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

அவற்றைக் கருத்தில் கொண்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:“ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் போன்று பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல” - ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details