சென்னை: இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்து, எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பந்தநல்லூர் திட்டப் பகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டத்தின் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்க ஒ.என்.ஜி.சி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு எண்ணெய் கிணறும் 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, மக்களை ஏமாற்றி திட்டங்களுக்கு அனுமதி பெற்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
காவிரிப் படுகையில் ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல்லாயிரம் அடி ஆழத்திற்கு துளையிட்டுள்ளது, ஓ.என்.ஜி.சி நிறுவனம். 10 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைத்து, இயக்கத் தொடங்கினால் அரியலூர் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும்.