சென்னை: தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு அமைக்க வேண்டும். ஆணையம் நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,"அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சனி, ஞாயிறு, காந்தியடிகள் பிறந்தநாள் என 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றவர்கள் இன்று மீண்டும் சென்னைக்கு திரும்ப வேண்டும். ஏராளமான மக்கள் வெளியூர்களுக்கு சென்றிருப்பதையும், அவர்கள் அனைவரும் சென்னைக்கு திரும்புவதற்கு தேவையான அளவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததையும் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகங்கள், அவற்றின் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன.
பூஜை விடுமுறை நாட்களுக்காக வரும் 20ஆம் நாள் சென்னையிலிருந்து மதுரை செல்லவும், விடுமுறை முடிந்து 24ஆம் நாள் சென்னைக்கு திரும்பவும், அதிக அளவாக ரூ.4440 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதே நாட்களில் சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்ல ரூ.4560, அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.4620 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல ரூ.3700, சென்னைக்கு திரும்ப ரூ.3753 என்ற அளவிலும், சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.4500, அங்கிருந்து சென்னைக்கு ரூ.4440 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை நாட்கள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நாட்களில் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லவும், அங்கிருந்து சென்னை திரும்பவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இருக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளில் ரூ.459, படுக்கை வசதி பேருந்துகளில் ரூ.920 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை விட தனியார் பேருந்துகளில் 10 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதே காலத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல ரூ.3,419 மட்டும் தான் கட்டணம். விமானத்தை விட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்கான காரணமும் நமக்கு விளங்கவில்லை.