சென்னை:தியாகராய நகரில் உள்ள சர். பிட்டி தியாகராயர் அரங்கில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் 'தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நிராகரிப்போம்' என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து, மஹாராஷ்டிரா வீட்டு வசதி துறை அமைச்சர் ஜித்தேந்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கருத்தரங்கை தொடங்க வைத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, ஏழை மாணவர்களுக்கு காலை உணவு அறிவிப்பிற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் பார்க்காமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்திருப்பார்கள். தேசிய கல்விக் கொள்கையை தேசியக் கொள்கை என்பதற்காக எதிர்க்கவில்லை. அதில் கொள்கை இல்லை என்பதற்காக எதிர்க்கிறோம்.
இந்தி எதிர்ப்பையும், சமஸ்கிருதம் தெரிந்தால் தன் மருத்துவப் படிப்பு என்பதையும் எதிர்த்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். தேசிய கல்விக் கொள்கை மொழியாக்கத்தில் பல வாக்கியப்பிழைகள் உள்ளன. மொழி பெயர்ப்பில் சமஸ்கிருதம் குறித்து ஆங்கிலத்தில் உள்ளது. ஆனால், தமிழில் இல்லை. தமிழ் மொழிப் பெயர்ப்புக்கு கேட்டிருந்தால் நாங்களும் உதவி இருப்போம்.
2015ஆம் ஆண்டே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதை எதிர்த்தார். புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது நமது கடிகாரத்தை நாமே திருப்பி வைப்பதற்கு சமம் என கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார். முந்தைய காலத்தில் இந்தியாவில் என்ன கல்விமுறை இருந்ததோ, அதனை இந்தக் கொள்கை தேடி செல்கிறது என்கின்றனர். ஆனால், முந்தைய கல்வி குலக்கல்வி தான். பல மொழி, மொழி ஆளுமை என்பதில் சமஸ்கிருதத்தில் இலக்கியம் சொல்லித் தரப்படும் என உள்ளது.