சென்னை:சென்னை: தமிழ்நாட்டில் TNSWAN, BHARATNET மற்றும் TAMILNET ஆகியவற்றை உள்ளடக்கி ஒருங்கிணைந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் அதன் மூலம் மாநிலம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2022-23 ஆண்டில் 16.4% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் ரூபாய் 2 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம் 3,50,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த தொலைதொடர்பு இணைப்பு மற்றும் 5G அலைகற்றை பயன்பாட்டினை உறுதி செய்யவும், வழித்தட உரிமை செயல்முறைகளை எளிதாக்கவும், தொலைதொடர்பு உட்கட்டமைப்பு கொள்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மின் ஆளுமையில் இணைய இணைப்பு ஒரு முக்கிய அங்கமாகும். தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பு (TNSWAN) 1 GBPS தேசிய அறிவித்திறன் வலையமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களுக்கு குரல், தரவு, இணையம் மற்றும் ஒலி-ஒளி காட்சி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்ணாடி இழை வடம் மூலம் அதிவேக இணைய இணைப்புகளை உறுதி செய்வதில் பாரத் நெட் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியான தமிழ்நெட் மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்புறங்களையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
TNSWAN, BHARATNET மற்றும் TAMILNET ஆகியவற்றை உள்ளடக்கி ஒருங்கிணைந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்படும். 2.33 லட்சம் சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப கோபுரத்தின் கட்டுமான பணிகள் ரூபாய் 88.21 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தகவல் தொழில்நுட்ப கட்டடமானது மே மாதம் திறக்கப்பட உள்ளது. எல்கோசெஸ்- விளாங்குறிச்சி, கோயம்புத்தூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டபத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களின் இட தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, மேலும் 2.66 சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் ரூபாய் 114.16 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
தலைமைச் செயலகத்தில் இணைய தாக்குதலை தடுக்க சுமார் 2,533 கணினிகள் அடையாளம் காணப்பட்டு முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டன. சுமார் 813 கணினிகளில் வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது. ஆதார் நிரந்தரப் பதிவு மையங்கள் மூலம் 31-01-2023 வரை 87,89,309 ஆதார் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுக்கான மடிக்கணினி, கையடக்க கணினி வழங்கும் பணிகளையும் எல்காட் மேற்கொள்கிறது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்புரை கண்டறிதல் கைப்பேசி செயலின் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை 20 ஆயிரத்து கண்புரை நோயாளிகள் கண்டறியப்பட்டு மேல் ஆலோசனை மற்றும் அறுவை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இன்றைய தேதியின் படி பள்ளி கல்வியை முடித்து இரண்டு முதல் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுமார் 14,758 மாணவிகள் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சுமார் 2,02,824 மாணவிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றப் பதிவுகளை மின்மயமாக்குதல் மற்றும் மேலாண்மை செய்தல், முதற்கட்டமாக 1921ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரையிலான புத்தகங்களை மின்னணுமயமாக்கும் பணியானது 16.11.2023 க்குள் நிறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் குறித்து பரிசீலனை - வருவாய்த்துறை அமைச்சர் தகவல்