சென்னை: சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து டிச.26ஆம் தேதி நள்ளிரவு 11.45 மணியளவில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. வாயு கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதையடுத்து வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், ஆலையைத் தற்காலிகமாக மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாகத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, "தவறு செய்தது அரசாக இருந்தாலும், தனியார் நிறுவனமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடல்சார் வாரியம், மீன்வளத்துறை, தொழில் பாதுகாப்புத்துறை இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என ஜனவரி 2ஆம் தேதி உத்தரவிட்டனர்.