சென்னை:பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க மேற்கொள்ளப்படும் ஆய்வை கைவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் காவிரி டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட 6 இடங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.
இதற்காக 500 - க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனிடையே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6- க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குறியது.
இதையும் படிங்க:காவிரி டெல்டாவில் புதிய நிலக்கரி திட்டங்களுக்கு அரசு அனுமதி? - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
ஏற்கனவே, NLC நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் காவிரி டெல்டா பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்களை கபளிகரம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் இந்த டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும்.
'மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம், விவசாயம்தான் வேண்டும்' என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு. ஆகவே, மாநில அரசு இது வெறும் ஆய்வுப்பணிதான், சுரங்கம் அமைக்கப்படபோவதில்லை என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளைப் போல மக்களை ஏமாற்றாமல், இந்த ஆய்வுப்பணிக்காக விடப்பட்ட டெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவதற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தும்பை விட்டு வாலை பிடிப்பதைவிட ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டும். தவறும்பட்சத்தில், அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் போராட்டமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழ்நாடு அரசு, தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதால் நிலக்கரி சுரங்கம் இங்கே அமையாது. விவசாயிகள் கவலைபட வேண்டாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆண்களுக்கு இணையாக கடலில் மீன்பிடிக்கும் பெண்கள்.. தூத்துக்குடி மீனவப் பெண்களின் கண்ணீர் கதை!