அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள டிடிவி. தினகரன், அக்கட்சியை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்துடன் பிரமாண பத்திரம் அளித்த 14 பேர் தற்போது கட்சியில் இருந்து விலகி விட்டதால், அந்த பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என புகழேந்தி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியை பதிவு செய்ய அக்கட்சியின் சார்பில் 100 தனி நபர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில், தான் உட்பட மொத்தம் 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், பின்னர், தினகரனின் நடவடிக்கையில் உடன்பாடின்றி, தானும், முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் அ.ம.மு.க வில் இருந்து விலகி விட்டதால், கட்சியை பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.