நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தை பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக தலைமையிலான கூட்டணி 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களை கைப்பற்றியது. ஆனால், இந்த முறை பாமக, பாஜக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் மெஹா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இருந்தபோதும், அதிமுக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இதற்கு, டிடிவி தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்தித்தது தான் காரணம் என, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஒருசில இடங்களில் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக தோல்வியை தழுவியது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி வாகை சூடியது போல், இந்த முறையும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடுவோம் என, டிடிவி தினகரன் நினைத்திருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகளில் அவரது கனவு கானல் நீராகிவிட்டது.
இதனால், அதிமுகவும் தினகரனுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய கண்டாயத்தில் உள்ளது. தினகரனும் தன்னுடைய அரசியல் வாழ்வை தலை நிமிர்த்த அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதைக்கருத்தில் கொண்டே அதிமுகவுடன், அமமுக விரைவில் இணையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.