தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்சோ வழக்குகளை மட்டுமே கவனம் செலுத்துகின்றன ஊடகங்கள்.. டிடிவி தினகரன் தொடர்ந்த நீதிபதிகள் கூறியது ஏன்? - ttv oreign exchange fraud case

TTV Dhinakaran Case: டிடிவி தினகரன் அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் அதிகரிப்பதற்கு ஊடகங்கள் தான் முக்கிய காரணமாக உள்ளன என்றும் ஊடகங்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 9:37 AM IST

சென்னை: கடந்த 1995 - 1996 காலக்கட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்று, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறையினர், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் எனும் ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை டிடிவி தினகரன் செலுத்தவில்லை. இதனால் டிடிவி தினகரனை, திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை தரப்பில் 2005ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நேற்று (செப்டம்பர் 05) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தினகரன் திவாலானவர் என நோட்டீஸ்: இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி, "ஃபெரா சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த பிறகும் அபராதத்தை செலுத்தவில்லை.

இதனால் தினகரனை திவாலானவர் என சட்ட ரீதியாக அறிவிக்கும் வகையில், நோட்டீஸ் பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை. இது உரிமையியல் பிரச்சினை கிடையாது" என்றார். ஆனால் டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், "தினகரனுக்கு உள்ள நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸை பிறப்பித்துள்ளனர். இது சட்ட ரீதியாக தவறு" என்று வாதிட்டார்.

சட்டம், எல்லாருக்கும் ஒன்று தான்:அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "100 சதுர அடி நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து விட்டால் அரசு அதிகாரிகள் புடைசூழ, புல்டோசருடன் ஆக்கிரமிப்பை அகற்ற செல்கின்றனர். ஆனால் இத்தனை ஆண்டுகளாக 28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாமல் உள்ளார். அதை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், "முன்னாள் எம்பி என்பதற்காக அபராதத்தை செலுத்த முடியாது எனக் கூற முடியுமா?" என டிடிவி.தினகரன் தரப்பு வாதத்திற்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "சட்டம் அனைவருக்கும் பொதுவானது தான். நாட்டின் குடியரசுத் தலைவரானாலும், பிரதமரானாலும் தவறு செய்தால் சட்ட ரீதியாக எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். மேலும், அமலாக்கத்துறை விதித்துள்ள அபராதத்தை செலுத்தியிருந்தால் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு இருக்காது" என்றனர்.

ஊடகங்களின் செயல்பாடு: பின்னர், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது "தினகரனுக்கு சட்டரீதியாக வழக்கு தொடர உரிமை உள்ளது. ஆனால் விசாரணையை எதிர்கொள்ளாமல் எப்படி சட்டரீதியான நிவாரணம் மட்டும் எதிர்பார்க்க முடியும். மேலும், தினகரன் வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பேசிய நீதிபதிகள், ஊடகங்களின் தற்போதைய செயல்பாடு கவலையளிப்பதாக உள்ளது.

முக்கிய செய்திகள் பல இருந்தாலும் நாள் முழுவதும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் போன்ற செய்திகளை மட்டுமே திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறது. இதனால், தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் அதிகரிப்பதற்கு ஊடகங்கள் தான் முக்கிய காரணமாக உள்ளன.

ஊடகங்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நீதிபதி ஒரு வழக்கின் தீர்ப்பு குறித்து வேதனையாக கருத்து தெரிவித்தால், அதில் தேவையானவற்றை நீக்கிவிட்டு தங்களுக்கு என்ன தேவையோ?, அதை மட்டும் ஒளிபரப்புவது கவலையளிக்கிறது" என தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:ஆன்லைன் விளையாட்டு தடைக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு தேதியை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details