சென்னை:கடந்த ஜனவரி 4ஆம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மரணமடைந்தார். இந்த நிலையில் காலியான இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல், வருகிற பிப்ரவரி 27 அன்று நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள், தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவெடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை நியமித்து கட்சித் தலைமை அறிவித்தது. இவருக்குக் கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக, திக, மதிமுக உள்ளிட்டவை மட்டுமின்றி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
அடுத்ததாகத் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, இபிஎஸ் - ஓபிஎஸ் எனப் பிரிந்துள்ளதால், இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது என்பது குறித்தும் குழப்பம் நீடித்து வருகிறது.
மேலும் இபிஎஸ் தரப்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜக உடனும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.