நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்புப் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அப்போது, அவர் பேசுகையில், "சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்கள், நகராட்சியில் உள்ள 247 அம்மா உணவகங்கள் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 4 அம்மா உணவகங்கள் என மொத்தம் 658 அம்மா உணவகங்களில் எவ்விதத் தடையுமின்றி யார் வேண்டுமானாலும் உணவு அருந்தலாம்.
அம்மா உணவகத்துக்கு என்று ரூபாய் 31.39 கோடி சிறப்பு நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதுவரை அம்மா உணவுகள் மூலம் மொத்தம் 122 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் நாள்தோறும் மூன்று வேளையும் தரமான உணவு தங்கு தடையின்றி வழங்கப்படவேண்டும்.
இதனை மாநகராட்சி நகராட்சி மற்றும் 4 ஊராட்சி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை சார்ந்த ஆணையர்கள், அதற்காக தனிப் பொறுப்பு அலுவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். மேலும் அம்மா உணவகங்களில் தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பதை பொறுப்பு அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இதைத் தவிர சமுதாய சமையலறை கூடங்கள் பல இடங்களில் செயல்படுகின்றன. இந்த சமுதாய சமையல் கூடங்கள் மூலம் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 582 இடங்களில் பொதுமக்களுக்கு மூன்று வேளையும் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை 13.29 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் வேலுமணி அலுவலர்களுக்கு வழங்கிய அறிவுரைகள்,
• "100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்கள் வேலை செய்யும்போது அவர்கள் தகுந்த இடைவெளியுடன் வேலை செய்வதை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
• ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை முழுமையாக வழங்கவும், கிருமி நாசினிகள் இரண்டு மாத இருப்பை உறுதி செய்யவும், போதுமான அளவில் தெளிப்பு உபகரணங்களை இருப்பில் வைக்கவும், பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தகுந்த இடைவெளியை அனைத்து பொது இடங்களிலும் உறுதி செய்ய வேண்டும்.
• தினசரி காய்கறி சந்தைகளில் செயல்பாடு, தள்ளுவண்டிகள் தெருக்களில் சென்று காய்கறிகளை நியாய விலையில் விற்பதை உறுதி செய்ய வேண்டும்.
• அனைத்து பொது இடங்களிலும் தினசரி தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் நோய்த் தொற்று உள்ளவர்களின் வீடுகளில் தனியே குப்பை சேகரித்திடவும், அனைத்து தூய்மைப் பணியாளர்கள், பாதாள சாக்கடைப் பணியாளர்கள் ஈடுபடுவோருக்கு கையுறை, காலுறை, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
• தூய்மைப் பணியாளர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவ போதிய சோப்புகள் வழங்கிட வேண்டும், உள்ளாட்சிப் பகுதிகளில் வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அனைத்து நிர்வாக உதவிகளும் பணியாளர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:ஆதரவற்றோருக்கு உதவிய காவல் துறை