கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இணைய உணவு விநியோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சல் மட்டும் வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 144 தடை உத்தரவு தொடர்பான அறிவிப்பு வெளியான பின் சென்னையில் தங்கி பணிபுரிந்தவர்கள், படித்தவர்கள் உடனடியாக தங்களது சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர். இதனால் சென்னையில் தற்போது குறைவான அளவு வெளியூர்வாசிகளே வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் சாப்பிடுவது தற்போது சிரமமாக மாறியுள்ளது.
ஏழை பசியாற்றும் அம்மா உணவகம் மக்கள் கூட்டம் இல்லாததால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் வெகு சில கடைகளே திறந்திருக்கின்றன. அவற்றிலும் அதிக விலையில் உணவு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். ஒருவேளை உணவிற்கே 80 முதல் 120 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. அவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கும் உணவும் தரமானதாக இல்லை என்கிறார்கள் சிலர். தேவை அதிகமாக இருப்பதால் உணவங்கள் சுவை, தரம் குறித்து அக்கறை செலுத்துவதில்லை என புகார் கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் ஏழை, எளிய மக்கள் பசியாற உண்பதற்கு அம்மா உணவகம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்றே கூறலாம். ஐந்து ரூபாய்க்கு சூடான, தரமான உணவு வழங்கப்படுகிறது. இதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் அருகருகே நிற்கக்கூடாது என்பதற்காக தகுந்த இடைவேளையில் கோடு வரையப்பட்டுள்ளது. அதில் காத்திருந்து டோக்கன்களை பெற்றுச் செல்கிறார்கள். அம்மா உணவகங்களில் முன்பு பார்சல் வாங்க அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் பாத்திரம், டிஃபன் பாக்ஸ் எடுத்து வருபவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
ஏழை பசியாற்றும் அம்மா உணவகம் அம்மா உணவங்கள் தொடங்கப்பட்ட போது மிகுந்த வரவேற்பை பெற்றாலும் பின் காலப்போக்கில் அவை பொலிவிழந்துபோனது. தற்போது, ஊரடங்கு உத்தரவையடுத்து ஏராளமான மக்கள் இங்கு வந்து உணவு அருந்துகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அம்மா உணவங்களில் தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், சமீபத்தில் மூடப்பட்ட அம்மா உணவகங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதேநேரத்தில், அம்மா உணவங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பேருந்து வசதிகள் முறையாக இல்லை, அடையாள அட்டை இல்லை இதனால் வந்து செல்வது சிரமமாக உள்ளது என அவர்கள் கூறுகிறார்கள். இதனையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய திட்டங்களில் சிறந்தது என அம்மா உணவங்களை கூறலாம். இது தொடங்கப்பட்டபோது, இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. அரசுக்கு தேவையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறினர். ஆனால் இதுபோன்ற அசாதாராண சூழ்நிலையில் நகர்புற ஏழை மக்கள் பசியின்றி இருக்க அம்மா உணவகங்கள் மிகப் பெரிய பங்காற்றுகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. இதையும் படிங்க: முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆளுநர் பன்வாரிலால்