தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் கால்பதித்து தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டிவருகிறது.
இச்சூழலில் தமிழ்நாடு பாஜக வேல் யாத்திரையை நடத்திவருகிறது. தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி மறுத்தது. இருப்பினும் அனுமதியை மீறி பாஜக யாத்திரை நடத்துவதும், காவல் துறை அவர்களைக் கைதுசெய்து விடுவிப்பதும் தொடர்ந்து நடந்துவருகிறது.
இந்தச் சூழலில், பிகாரில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள பாஜக அடுத்தகட்டமாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
அண்மையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவராகப் பொறுப்பு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு மேலிடப் பொறுப்பாளர்களை நியமித்தது என மாநிலக் கட்சிகளைவிட பாஜக தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- அமித்ஷா இந்தச் சூழலில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 21ஆம் தேதி சென்னை வருகிறார். அரசு விழாக்களில் கலந்துகொள்ளும் அவர், முக்கிய அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருகையின்போது ரஜினிகாந்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவை கடுமையாக விமர்சித்து அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "சாதியாலும், மதத்தாலும் மக்களைப் பிளவுபடுத்துகிற, உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது. மனிதர்களை நெறிப்படுத்தவே மதங்கள்; அவர்களை வெறிப்படுத்த அல்ல. நாட்டுக்கு உணர்த்தும் பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழ்நாடு என்பதை தமிழ்நாடு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
Amit Shah to visit Tamil Nadu - BJP vs ADMK மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழிதேடுவதை மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்பவர்கள் உணர வேண்டும். மக்கள் பின்தொடரும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து கருப்பர் கூட்டமும், காவிக் கொடி பிடிப்பவர்களும் நடந்துகொள்ள வேண்டும்” என எச்சரிக்கைவிடுக்கும் வகையிலும், கண்டனம் தெரிவிக்கும்வகையிலும் நமது அம்மா கட்டுரை அமைந்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல், "வேல் யாத்திரையை எதிர்ப்பது என்பது சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதற்காக. இது அரசின் கடமை. அதிமுக அரசு யாராக இருந்தாலும் கேள்வி எழுப்பும், கூட்டணி கட்சியாக இருந்தாலும் கேள்வி கேட்போம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய சூழலில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், யாரும் மக்களை ஏமாற்ற முடியாது. திசை திருப்பவோ, மூளைச்சலவை செய்யவோ முடியாது. வேல் யாத்திரை மூலம் பாஜக வாக்கு வங்கியை அதிகரிக்க முடியாது" என்று கூறினார்.