சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம் புயல்' காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் மொத்தமும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த 48 வருடங்களில் இல்லாத கனமழை சென்னையில் பெய்து வருவதாகவும், இது போன்ற ஒரு கனமழையை சென்னை மக்கள் சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அனைத்து பகுதிகளிலுமே தண்ணீர் வெள்ளக்காடாக தேங்கியுள்ளது. மழை நீர் தேங்காத பகுதி என எதுவுமே இல்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த புயல் பாதிப்பால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவித அவசரத் தேவையாக இருந்தாலும், உடனடியாக சென்னை மாநகராட்சியை அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயாலானது இன்று (டிச.5) முற்பகலில் கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.4) உத்தரவிட்டார். புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் எனவும், இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணை கொண்டு வெல்வோம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.