தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது: நல்லகண்ணு!

சென்னை: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

nallakannu

By

Published : Aug 28, 2019, 9:41 PM IST

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.நல்லக்கண்ணு, "ஆகஸ்ட் 25ஆம் தேதி வேதாரண்யத்தில் இரு சமூக இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆதிக்க சமுதாயத்தினர் அம்பேத்கர் சிலையின் தலையை உடைத்துள்ளனர். இது சாதிய வெறியின் உச்சமாக இருக்கிறது. சாதாரண மக்களிடையே நிலவும் சிறிய பிரச்னைகள் எல்லாம் பெரிய மோதலாக உருவெடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அம்பேத்கர் சிலை காவல் நிலையத்துக்கு அருகில் உள்ளதால் இதனை காவல் துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதனைத் தடுக்க தவறிவிட்டார்கள். இதனால் அது பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. ஆனால் தற்போது காவல் துறை உடனடியாக சிலையை நிறுவியுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது

எனினும் அவர்கள் வைத்திருப்பது சாதாரண சிலை. இது போன்ற சாதி பிரச்னை இனி நடைபெறாமல் இருக்க நாகப்பட்டினத்திலுள்ள அனைத்து கட்சியினரும், பொது இயக்கங்களும் கூடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அம்பேத்கருக்கு வெண்கல சிலை நிறுவவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அம்பேத்கர் என்பவர் அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்து அரசியல் சாசனத்தை உருவாக்கியவர். தீண்டாமை ஒழிப்புக்கு போராடியவர். அவரை ஒரு சாதி தலைவராக்கி அவர் சிலையை உடைத்துள்ளார்கள் என்றால் இந்த நாட்டில் அரசியல் சாசனத்தின் மீதும், அதனை உருவாக்கியவர் மீதும் மரியாதை இல்லை என்பது தெரியவருகிறது. இந்தியாவில் சாதி ஒழிப்புமுறை ஒழிய வேண்டும் என்று சாகும்வரை போராடியவர் அம்பேத்கர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதன்முதலில் சட்டத்தை உருவாக்கியவர். ஆனால் இன்று அந்த பிற்படுத்தப்பட்ட மக்களே அவரை மதிக்க தயாராக இல்லை.

இந்திய நாட்டில் மாபெரும் சமுக மாற்றத்திற்கு போராடியவர் டாக்டர் அம்பேத்கர். அவரின் சிலை இன்று தமிழ்நாட்டில் உடைக்கப்பட்டுள்ளது என்றால் அது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. இது போன்ற ஒரு சம்பவம் இனி வராமல் தடுக்க வேண்டிய கடமை அரசியல் தலைவர்களுக்கும், காவல் துறைக்கும் உண்டு" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details