சென்னை: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன் (24). இவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, திருமுல்லைவாயல், மேட்டு தெருவைச் சேர்ந்த ஆகாஷ் (25), கொரட்டூர், காமராஜர் நகரைச் சேர்ந்த பிரசாந்த்(27), அவரது தம்பி மணி (25) உள்ளிட்ட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகிய மூவரும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றனர். பின்னர், அங்கு விசாரணை முடிந்து அவர்கள் மூவரும் மாநகர பேருந்து மூலமாக அம்பத்தூரை அடுத்த பாடிக்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்த தகவல் தெரிந்து கொலை செய்யப்பட்ட அரவிந்தனின் தந்தை ரவி (65), சகோதரர்கள் அப்பன்ராஜ் (32) விவேக் (30) ஆகியோர் பாடி பகுதியில் காத்து கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் இருந்து வந்த மூவரும் பாடி மீன் மார்க்கெட்டில் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இறந்த அரவிந்தனின் அண்ணன் அப்பு வருவதை பார்த்த ஆகாஷ், பிரசாத், மணி மூவரும் பயந்து ஓடி உள்ளனர்.
பதைபதைக்கும் சிசிடிவி காட்சி அப்போது, ரவி, அப்பன்ராஜ், விவேக் ஆகிய மூவரும் சேர்ந்து ஆகாஷ் பிரசாத், மணி ஆகியோரை விரட்டி சென்றனர். பின்னர், அவர்களை மூவரும் சேர்ந்து பாடி பேருந்து நிறுத்தத்தில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் மூவருக்கும் பலத்த படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். இதனை பார்த்த ரவி, அப்பன்ராஜ், விவேக் மூவரும் தப்பி ஓடினர். தகவலறிந்து கொரட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர், காவல் துறையினர் படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும், காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:காரைக்கால் பெண் கொலை, இளைஞர் கைது!