சென்னை:காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், வாலாஜாபாஜ் ஒன்றிய கவுன்சிலருமான அளாவூர் நாகராஜ் (57) என்பவர் நேற்று (செப்.25) நள்ளிரவு சென்னையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு தனது ஆதரவாளர்களுடன் இரண்டு கார்களில் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தள்ளுவண்டிக் கடையில் இரவு உணவு சாப்பிடுவதற்கு சென்றுள்ளனர். இதில் நாகராஜ் சைவம் என்பதால் அருகில் இருந்த தள்ளுவண்டிக் கடையில் தனியாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அதே கடையில் சாப்பிட்ட அமரர் ஊர்தி ஓட்டுநர், வாகனத்தின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்திய நிலையில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாப்பிட்டு கொண்டிருந்த நாகராஜ் மீது வேகமாக மோதியது.
இதில் நாகராஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். இதனைக் கண்ட நாகராஜின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுமதித்தனர்.