தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடிக்கு வைகோ வைக்கும் வேண்டுகோள்! - dmk

சென்னை: சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனைப் பாதுகாத்து, மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்.

வைகோ

By

Published : May 25, 2019, 11:57 PM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கின்ற நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாரதிய ஜனதா கட்சி வெற்றிச் செய்திகள் மட்டுமே நாடெங்கும் அலை பாய்ந்து கொண்டு இருக்கின்ற வேளையில், வேறு சில செய்திகள் கவலையையும், அதிர்ச்சியையும் தருகின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி நகரில் நேற்று 24 ஆம் தேதி, ஒரு இஸ்லாமியப் பெண் மற்றும் இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள், பசு மாட்டுக் கறி எடுத்துச் சென்றார்கள் என்று கூறி, ‘பசுக் காவலர்கள்’ அவர்களை மரத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கும் காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றது.

‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக்கோரி மூன்று பேரையும் மரக்கட்டைகளால் இரத்தம் சொட்டச்சொட்ட இரத்த வெறிபிடித்த கும்பல் தாக்கி உள்ளது. ‘பசு காவலர்கள்’ என்று கூறிக்கொண்டு ‘இராமர் சேனா’ தலைவர் சுஷபம் பகெல் உள்ளிட்ட கும்பல் இக்கொடுமையைச் செய்ததாக மத்தியப் பிரதேச காவல்துறை தெரிவித்து இருக்கின்றது.

பிரதமரின் சொந்த குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தின் பதூரா வட்டத்தில் உள்ள மாகூவத் கிராமத்தில் உள்ள கோவிலில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணம் நடத்துவதற்கு உயர் சாதியினர் தடை விதித்து இருப்பதாக, பிரவீன் என்ற தலித் சமூகத்தவர் தனது முகநூலில் பதிவு செய்து இருக்கின்றார். இந்தப் பதிவை நீக்க வேண்டும் என்று கூறி, 200-க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டுக்குள் புகுந்து, கணவன் மனைவி இருவரையும் தாக்கி இருக்கின்றனர்.

பிரவீன் மனைவி தருலதாபென் காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில், வீட்டுக்குள் புகுந்து தனது கணவரை இரும்புக் குழாய் மற்றும் தடியால் மயக்கம் வரும் வரையில் அடித்துச் சித்ரவதை செய்ததாகவும், பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டு, வீட்டின் மேல் கல்லெறிந்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் உயிருக்கு அஞ்சிக் கிடப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டு இருந்த வேளையில், குஜராத் காவல்துறை, தலித் தம்பதியரைத் தாக்கிய வன்முறைக் கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரையில், எவரையும் கைது செய்யவில்லை. மத்தியப் பிரதேசத்திலும், குஜராத்திலும், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடைபெற்று இருக்கின்ற இந்த வன்கொடுமைகள், நரேந்திர மோடி அவர்களின் அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் மீது அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனைப் பாதுகாத்து, மத நல்லிணக்கத்தை உருவாக்கி, நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details