மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த போராட்டம் தொடங்கிய போது விவசாய போராட்டக் குழுக்களைக் கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர். விவசாயிகளின் மீதான காவல் துறையினரின் அடக்குமுறைகளைக் கண்டித்தும், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஸ்டாலினும் கே.எஸ். அழகிரியும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், "இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் அறுபத்து இரண்டு கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மகத்தான பேரணியை மதிக்காமல், “புராரி மைதானத்திற்குப் போனால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும்”என்று நிபந்தனை விதிக்கும் சர்வாதிகார - மேலாதிக்க மனப்பான்மை கொண்ட மத்திய பா.ஜ.க அரசுக்கு, நாங்கள் அனைவரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“குறைந்தபட்ச ஆதார விலை”என்ற சொற்றொடரை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை, காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக, விவாதமே இன்றி, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீணாக்கி, அவர்தம் எதிர்காலத்தை இருளடையச் செய்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.
இவை போதாதென்று, மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, வேளாண்மையின் உயிர் நாடியாக இருக்கும் இலவச மின்சாரத்தையும் பறிக்க வஞ்சகமாகத் திட்டமிடப் படுகிறது. “குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை”; “விவசாய மண்டிகள் இல்லை”; “இலவச மின்சாரம் இல்லை”என்று அடுக்கடுக்கான துரோகத்தைச் செய்து, விவசாயப் பெருமக்களின் கண்ணிரண்டையும் பிடுங்கிக் கொண்டுவிட்டது மத்திய அரசு.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதைப் போல், “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளை அளித்துள்ளது”என்று நேற்றைய தினம் “மன் கி பாத்”உரையில் பேசியிருப்பது, விவசாயிகள் தமது வாழ்வுயிரையும் உரிமையையும் காக்க நடத்தி வரும் போராட்டத்தை அவமதிப்பதாகவும், எள்ளி நகையாடுவதாகவும் உள்ளது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து டிராக்டர்களுடன் வந்த விவசாயிகள் டெல்லிக்குச் செல்லும் பல்வேறு வழிகளில் அணிவகுத்துப் போராடி வருகிறார்கள்.
“மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுக”; “குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்”; “மின்சாரத் திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும்”; உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் விவசாயிகளை சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்குச் சுமுகமான முறையில் தீர்வு காண, பிரதமர் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.