17ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் திமுகவும் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை திமுகவும், ஒரு தொகுதியை அதிமுகவும் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் மட்டுமின்றி அமமுக, நாதக, மநீம ஆகிய கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை களமிறக்கினர்.
இவர்கள் இல்லாமல் தொகுதிக்கு சுயேட்சைகள் உள்ளிட்ட 10 வேட்பாளர்களாவது கூடுதலாக களமிறங்கியிருந்தனர். இவர்கள் யாரையும் விரும்பாத பட்சத்தில் ‘நோட்டா’ (None Of The Above - NOTA) என்ற சின்னத்திற்கு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் உரிமை வழங்கியுள்ளது. ஆனால், நோட்டாவிற்கு வாக்களிப்பது ஏதோ ஃபேஷன் போன்றதொரு மனநிலையை சில சமூகவலைதளவாசிகள் பரப்பியதன் விளைவாக தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேட்சையாக களம் காண்பவர்கள் என யாரையும் தெரிந்து கொள்ளாமலே சில ‘அதிமேதாவிகள்’ நோட்டாவிற்கு வாக்களித்துவிட்டு, அதனை பெரும் சாதனையாக சிலாகித்துக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.
இந்த அவல நிலையில் இருந்து இளம் வாக்காளர்களை காக்க வேண்டிய பெரும் கடமை இந்த சமூகத்திற்கு இருப்பதை உணர்ந்த சிலர், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாக கடந்த தேர்தலில் பதிவான 1.44% வாக்குகளை விட இம்முறை நோட்டாவிற்கு விழுந்த வாக்குகள் 1.28% ஆக குறைந்துள்ளது. இருப்பினும் இந்த நிலை மாறிட வேண்டும் என்பதே பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் நோட்டாவிற்கு பதிவான வாக்குகள் தொகுதி வாரியாக:
தொகுதிகள் | நோட்டா பெற்ற வாக்குகள் | சதவீத அடிப்படையில் |
அரக்கோணம் | 12179 | 1.03 |
ஆரணி | 16921 | 1.48 |
மத்திய சென்னை | 13822 | 1.76 |
வடசென்னை | 15687 | 1.64 |
தென்சென்னை | 16891 | 1.5 |
சிதம்பரம் | 15535 | 1.35 |
கோவை | 23190 | 1.85 |
கடலூர் | 8725 | 0.84 |
தருமபுரி | 13379 | 1.09 |
திண்டுக்கல் | 14177 | 1.22 |
ஈரோடு | 14795 | 1.39 |
கள்ளக்குறிச்சி | 11576 | 0.96 |
காஞ்சிபுரம் | 21661 | 1.75 |
கன்னியாகுமாரி | 6131 | 0.58 |
கரூர் | 9603 | 0.87 |
கிருஷ்ணகிரி | 19825 | 1.71 |
மதுரை | 16187 | 1.59 |
மயிலாடுதுறை | 8231 | 0.75 |
நாகப்பட்டினம் | 9463 | 0.94 |
நாமக்கல் | 15073 | 1.33 |
நீலகிரி | 18149 | 1.8 |
பெரம்பலூர் | 11325 | 1.03 |
பொள்ளாச்சி | 15110 | 1.4 |
ராமநாதபுரம் | 7595 | 0.71 |
சேலம் | 17130 | 1.36 |
சிவகங்கை | 9283 | 0.86 |
ஸ்ரீபெரும்புதூர் | 23343 | 1.66 |
தென்காசி | 14056 | 1.32 |
தஞ்சாவூர் | 15105 | 1.43 |
தேனி | 10686 | 0.91 |
திருவள்ளூர் | 18275 | 1.3 |
தூத்துக்குடி | 9234 | 0.93 |
திருச்சி | 14437 | 1.38 |
திருநெல்வேலி | 10958 | 1.05 |
திருப்பூர் | 21861 | 1.95 |
திருவண்ணாமலை | 12317 | 1.07 |
விழுப்புரம் | 11943 | 1.05 |
விருதுநகர் | 17292 | 1.61 |
தமிழ்நாடு அளவில் மொத்தமாக 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. இது பதிவான மொத்த வாக்குகளில் 1.28 சதவீதம் ஆகும். 100 வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் 97 பேர் நோட்டாவிற்கு வாக்களித்துவிட்டு, எஞ்சியுள்ள 3 பேர் ஒரு வேட்பாளருக்கு வாக்களித்தால் அவரே வெற்றி பெறுவார் என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இத்தனை வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செல்லாக் காசுகளாக வீணாக்கியுள்ளனர் என்பதே வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.