தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஏற்கனவே, கரோனா தொற்று பரவலால் பொருளாதார ரீதியாக வணிகர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ், அவரது தந்தை ஆகியோரைக் கடையை அதிக நேரம் திறந்து வைத்தார்கள் என்ற காரணத்திற்காகக் காவல் துறையினர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு, கண்டனம் தெரிவிக்கும் விதமாக, நாளை (ஜூன் 26) தமிழ்நாடு முழுமையாக ஒரு நாள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கேட்கும் விதமாக ஜூன் 30ஆம் தேதி தமிழ்நாடு முழுமையாக இருவர் கொலைக்கு காரணமான காவல் துறையினர் மீது நடவடிக்கைகள் எடுக்கக் கோரி அனைத்து காவல் நிலையத்திலும் புகார் மனு கொடுக்கும் போராட்டமும் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 26) காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்தகங்கள் மூடப்படும் என மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.