தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை தேவை' - ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

ராமதாஸ்

By

Published : May 19, 2019, 4:27 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

"இந்தியாவில் அதிகரித்து வரும் மதுப்பழக்கம் குறித்து லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன. இந்தியாவில் தேசிய அளவில் மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதையே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

மருத்துவ உலகின் புனித இதழாகப் போற்றப்படும் லான்செட் இதழில் உலக அளவிலான மதுநுகர்வு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள டி.யூ. டிரெஸ்டன் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், இந்தியாவில் மதுநுகர்வு கடந்த 7 ஆண்டுகளில் 38% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டில் இந்தியாவில் வயதுக்கு வந்தவர்களிடையே சராசரி தனிநபர் மதுநுகர்வு 4.30 லிட்டராக இருந்தது. 2017ஆம் ஆண்டில் இது 5.90 லிட்டராக அதிகரித்திருக்கிறது. இந்தியர்கள் மது குடிக்கும் அளவு மட்டுமின்றி, குடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதுதான் இதற்குக் காரணம் என்பதை உணர முடிகிறது.

உலக அளவில் இந்தியாவில்தான் மதுநுகர்வு மிக அதிக அளவில் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் மதுநுகர்வு கவலையளிக்கும் அளவுக்கு அதிகரித்திருப்பதற்குக் காரணம், நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்கள் மதுவிற்பனையை வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறையாக மாற்றியிருப்பதுதான் என்பது எனது கருத்தாகும். வருவாய்க்கு ஆசைப்பட்டு மக்களின் வாழ்க்கையை அரசுகள் பறிக்கக்கூடாது.

நாடு முழுவதும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது விழித்துக் கொண்டு மதுவிலக்கு பாதையில் பயணிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். அவ்வாறு செய்யத் தவறினால், இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு மாறாக வீழ்ச்சிப் பாதையில் தள்ளாடும் நிலை ஏற்பட்டு விடும். மது மிகவும் ஆபத்தானது; சமூகத்திற்கு எதிரானது என்ற உண்மை அனைவரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஊடகங்கள் தீவிரமாக செய்ய வேண்டும்.

தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாராக இருந்தும், அதற்கு தடையாக இருப்பது மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய்தான். அதனால்தான் மது விலக்கை நடைமுறைப்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் மானியங்களை வழங்குதல், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாவது மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது.

மத்தியில் மீண்டும் அமையவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இவற்றை மீண்டும் வலியுறுத்தி, தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்க பாமக நடவடிக்கை மேற்கொள்ளும் " என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details