சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு வழக்கம் போல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், கோடை வெயில் சுட்டெரிப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கைள் எழுந்தன. அதன் அடிப்படையில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு, ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோடை விடுமுறைக்காக சென்னையில் இருந்து பூர்வீக ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் சென்னைக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். இதேபோல், கோடை விடுமுறையை கழிக்க சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு வந்தவர்கள், மீண்டும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பி வழியும் நிலையில், பெரும்பாலான ரயில்களில் ஜூன் முதல் வாரம் வரை முன்பதிவு டிக்கெட் இல்லை. இதனால் பயணிகளின் கவனம் விமானங்களுக்கு திரும்பியுள்ளது.
ஆனால், உள்நாட்டு விமானங்களில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விமானத்தில் செல்ல அதிகளவு டிக்கெட்கள் புக்கிங் செய்யப்படுவதால் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களிலும், திருச்சி, கோவை செல்லும் விமானங்களிலும் கட்டணம் பெருமளவு அதிகரித்ததுள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, கொச்சி, மும்பை, புனே, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சென்னையில் இருந்து புறப்படும் சில விமானங்களின் கட்டண விவரம் வருமாறு:
- வழித்தடம் வழக்கமான கட்டணம் தற்போதைய கட்டணம்
- கோவை ரூ.3,400 ரூ.12,000-ரூ.15,000
- தூத்துக்குடி ரூ.4,000 ரூ.5,000-ரூ.9,000
- திருச்சி ரூ.2,769 ரூ.4,400-ரூ.8,000
- மும்பை ரூ.6,000 ரூ.8,000-ரூ.10,000
- டெல்லி ரூ.4,973 ரூ.13,000
இதேபோல் சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி செல்ல ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "கோடை விடுமுறை முடிவடைவதால் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் இருக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. இதன் காரணமாக கடைசி நேரத்தில் புக் செய்யப்படும் சில டிக்கெட் விலை அதிகமாக உள்ளது.
அதேபோல் விமான எரிபொருட்களின் விலை உயர்வாலும், சில விமான நிறுவனங்கள் இது போன்ற நேரங்களில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது" என்றனர். பெரும்பாலான ரயில்கள், பேருந்துகளில் இருக்கைகள் இல்லாததால் கூடுதல் கட்டணம் செலுத்தி விமானத்தில் பயணிக்க வேண்டியுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.