தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யார் கை ஓங்கும்..! செயற்குழுவில் முடிவு? - OPS

அதிமுகவும் 2021 சட்டப்பேரவை பொது தேர்தலும்
அதிமுகவும் 2021 சட்டப்பேரவை பொது தேர்தலும்

By

Published : Sep 18, 2020, 7:46 PM IST

Updated : Sep 18, 2020, 10:05 PM IST

19:39 September 18

வரும் 28ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்...!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், மூத்த அமைச்சர்கள், அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கோஷம் எழுப்பிய தொண்டர்கள்

முன்னதாக, கூட்டத்திற்கு  ஓ. பன்னீர்செல்வம் வந்தபோது, 'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு' என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி வரும்போது 'நிரந்தர முதலமைச்சர் எடப்பாடியார்' என தொண்டர்கள் முழங்கினர். இரு தரப்பு தொண்டர்கள் எழுப்பிய கோஷத்தால் சிறிது சலசலப்பு உருவாகியது.

போஸ்டர் சர்ச்சை

துணை முதலமைச்சரின் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளம், அவரது தொகுதியான போடியில் ஓ. பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் வேட்பாளர் என குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசினர். 

இதன்பிறகு முதலமைச்சர் வேட்பாளர் பிரச்னை சற்றே ஓய்ந்தது. சந்திப்புக்குப் பின்னர் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் , எந்தவித முன்யோசனையும் இன்றி , கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் , தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும் , பத்திரிகைகளிலும் , தங்களின் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

கருத்துப் பரிமாற்றங்களை செய்வதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவும், 2021 சட்டப் பேரவை பொது தேர்தலும்....!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்தாண்டு நடக்கவுள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை அதிமுக ஏற்கெனவே தொடங்கியுள்ளது. நிர்வாக ரீதியாக மாவட்டங்கள் பிரிவு, புதிய நிர்வாகிகள் நியமனம், பல்வேறு பிரிவுகளுக்கு உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவருகிறது.

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சீரமைக்கப்பட்டு, நிர்வாகிகள், கீழ்மட்ட பிரதிநிதிகள் வரை நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மேலும் சில மாவட்டங்களை பிரித்து அதற்கான நிர்வாகிகளை நியமிக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.

எதிர்ப்பாளருக்குப் பதவிகள்...!

சமீபத்தில் அதிமுகவில் கிளம்பியுள்ள முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம், திருச்சி அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு, இப்போதே தீர்வு கண்டு தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் சமாதானப்படுத்துவது, அவர்களுக்கான பதவிகளை அளிப்பது ஆகியவற்றையும் தேர்தலுக்கு முன்பே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளனர்.

இதுதவிர, வரும் ஜனவரியில் சசிகலா விடுதலையாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில், தற்போதும் சசிகலாவின் ஆதரவாளர்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரது விடுதலைக்குப் பிறகு கட்சிக்குள் பாதிப்பு ஏதும் ஏற்படக்கூடாது என்பதிலும் அதிமுக தலைமை உறுதியாகவுள்ளது.

கூட்டணி குறித்து, பாஜக, தேமுதிக நிர்வாகிகள் பேசி வருவதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே, கூட்டணி தொடர்பாகவும் இன்றைய (செப்.18) ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்றைய கூட்டத்தில் பெரிய மாவட்டங்கள், பெரிய மாநகராட்சி, ஆகியவற்றை பிரித்து, கழக நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதிமுகவை பொருத்த வரை அனைத்து மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க தலைவர் ஒருவர் இல்லை என்பதால், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் வைத்து முன்னிலைப்படுத்தத் திட்டமிட இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த தேர்தல்களில், தொடர்ந்து அதிமுக இரண்டு முறை ஆட்சி அமைத்துள்ளது. எனவே மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, ஓரணியில் நின்று அதிமுக கட்சியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதியதாகப் பிரிக்கப்பட்டுள்ள 10 மாவட்டத்தில், புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் முடிவில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9. 45 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில், கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும், உறுப்பினர் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் கேபி முனுசாமி, சிவி சண்முகம், வைத்தியலிங்கம், ஆர்பி உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலா விடுதலை, மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேசியதாகவும், செயற்குழு நடைபெறும் நாளான செப்.28 ஆம் தேதி வரை தலைமை பற்றி யாரும் பேசக்கூடாது என்றும், கட்சி நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க...விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழந்த விவகாரம் - கைலெடுத்த மனித உரிமை ஆணையம் !

Last Updated : Sep 18, 2020, 10:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details