சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் என்னும் பெயரில் திமுகவினரின் சொத்து விபரங்களை வெளியிட்டார். பின்னர் அவர், இதே போல் இன்னும் சில பார்ட்கள் அதிமுகவினர் குறித்து வெளியிட இருப்பதாகவும், அனைத்துக் கட்சியிலும் ஊழல் செய்து சொத்து குவித்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்சையை கிளப்பியது. அண்ணாமலை மீண்டும் அதிமுகவிற்கு எதிர்ப்பான போக்கை கையில் எடுக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளது. முன்னதாக பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. அத்ற்கு பாஜக மூத்த தலைவர்களும், அதிமுக மூத்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாஜக - அதிமுக கூட்டணி பிளவுபடுவதாக கருத்து வலுத்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி சர்ச்சை சற்று ஓய்ந்து இருந்தது.
ஆனால், அப்போதும் அண்ணாமலை தன்னுடைய கருத்தில் இருந்து மாறாமல் அதனையே கூறி வந்தார். இந்நிலையில் திமுக சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டபோது அனைத்து கட்சித் தலைவர்களின் ஊழல்களையும் வெளியிடுவேன் எனக் கூறியது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: 'சாராய அமைச்சர் சரக்கு போட்டுப் பேசி இருப்பார்' - திருச்சியில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் எதிர்வினையாற்றி இருந்தனர். இந்நிலையில் சேலத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, “இனிமேல் அண்ணாமலை பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம். இப்படி பேசி பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். நான் கட்சிக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். தயவுசெய்து அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். வேறெந்த கட்சியைக் குறித்தாவது கேளுங்கள். காரணம் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும்.
அப்படியானவர்கள் குறித்து கேள்வி கேட்டால் நான் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். அதைவிடுத்து தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். அவர் ஏதாவது ஒன்றைப் பேசிவிடுகிறார். இதனால், அவர் குறித்து ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலைக்கு எங்களைப் போன்ற தலைவர்கள் வந்துவிட்டோம். முதிர்ந்த அரசியல்வாதி குறித்து கருத்து கேட்டால் பதில் சொல்லலாம்” என்றார்.
அண்ணாமலை அவ்வப்போது அதிமுக குறித்து நேரடியாக கருத்துகள் கூறிவந்தாலும் எடப்பாடி பழனிசாமி இதுவரை அண்ணாமலை குறித்து கருத்து தெரிவித்ததில்லை. இந்நிலையில் அண்ணாமலை குறித்து நேரடியாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது அதிமுக - பாஜக உறவில் இன்னமும் மோதல் போக்கே நீடிக்கிறது என்பதை காட்டுகிறது.
இந்நிலையில் அண்ணாமலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம். அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம்” விமர்சித்திருந்தார்.
பாஜக பிரமுகரின் இந்த கருத்தால் அதிமுகவினர் கொதித்து போய் உள்ளனர். மேலும் அண்ணாமலையின் ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டியின் கருத்தால் பாஜக மூத்த தலைவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணாமலையின் கருத்துகளால் அதிமுக - பாஜக இடையே கூட்டணி பிளவுபடுவதற்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் கூர்நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை பேட்டி கொடுத்து பெரிய ஆளாக நினைக்கிறார் - EPS-ன் முழு பேட்டி!