தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அணிகள் 4 ஆனால் முழக்கம் ஒன்று.. அதிமுகவில் நடப்பது என்ன? - aiadmk split issue

ஜெ.ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பில் நான்கு அணிகளாக பிரிந்து வந்த அதிமுகவினர் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என சூளுரைத்தனர். அதுகுறித்த ஒரு தொகுப்பினைக் காணலாம்.

ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம்; நான்கு அணியாக பிளவுபட்ட அதிமுக..
ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம்; நான்கு அணியாக பிளவுபட்ட அதிமுக..

By

Published : Dec 6, 2022, 2:20 PM IST

Updated : Dec 6, 2022, 2:31 PM IST

சென்னை: அதிமுக என்ற அரசியல் இயக்கம், 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது. 1972ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அதிமுக என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு 1987ஆம் ஆண்டு அதிமுக ஜானகி, ஜெயலலிதா என்று இரு அணியாகப் பிரிந்திருந்தது. 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் தோல்வியைச் சந்தித்த ஜானகி அரசியலிலிருந்து விலகினார். அப்போது இருந்து ஒரே ஆளாக 27ஆண்டுகள் அதிமுகவை வழிநடத்தியவர் ஜெயலலிதா என்று அனைவராலும் பேசப்பட்டது.

ஜெயலலிதா, 2001ஆம் ஆண்டு டான்சி வழக்கில் சிறைக்கு சென்ற போதும், 2014ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற போதும் அதிமுகவில் எந்த ஒரு பிளவும் ஏற்படவில்லை. ஆனால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அன்று, ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிமுகவில் பிளவு ஏற்பட தொடங்கியது, அது இன்று வரை தொடர்கிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா தான் அதிமுகவின் முகமாக கருதப்பட்டார். ஜெயலலிதா மறைந்த இரவு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஓபிஎஸ், சசிகலாவின் அழுத்தம் காரணமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போது தான் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார், இதுவே அதிமுகவின் முதல் பிளவு ஆகும். இதனை தொடர்ந்து முதலமைச்சராகத் தான் வர வேண்டும் என்று காய்களை நகர்த்திய சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். பின்னர் சசிகலாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த நிலையில் அதிமுக ஒன்றிணைந்தது. இதில், சசிகலா சிறை செல்லும் போது துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்திருந்தார். ஆனால் டிடிவி தினகரனால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருடன் சேர்ந்து பயணிக்க முடியாத சூழ்நிலையே நிலவியது.

ஓபிஎஸ் தர்மயுத்தம் அதிமுகவின் முதல் பிளவாகும்

இதனால், 18 எம்.எல்.ஏக்களுடன் அதிமுகவில் இருந்து வெளியேறி டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று தனி அரசியல் கட்சியைத் தொடங்கினார். இது அப்போது பிளவாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுகவின் வெற்றியை டிடிவி தினகரனின் பிளவு பெரிய அளவில் பாதிப்படையச் செய்தது, அப்போது தான் அதிமுகவில் தினகரனின் பிளவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது.

தேர்தல்களில் அதிமுகவின் வெற்றியை டிடிவி தினகரனின் பிளவு பெரிய அளவில் பாதிப்படைய செய்தது

இந்நிலையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடிந்து சென்னை திரும்பிய சசிகலாவிற்குத் தொண்டர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். அப்போது இருந்து நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சசிகலா தொடர்ந்து கூறி கொண்டு வருகிறார். அதிமுகவில் சசிகலாவிற்கு என்று ஒரு ஆதரவு இருக்கும் நிலையில் அதுவும் ஒரு பிளவாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சசிகலா தொடர்ந்து கூறி கொண்டு வருகிறார்

கடந்த வருடம் ஜெயலலிதாவின் நினைவு தினத்திற்கு ஒன்றாக சென்ற ஓபிஎஸ்-ஈபிஎஸ், இந்த வருடம் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக தனித்தனி அணியாகச் சென்று மரியாதை செய்துள்ளனர். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 33% வாக்கு வாங்கியது. இது ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரட்டை தலைமைக்குக் கிடைத்த வாக்கு வங்கி ஆகும்.

ஆனால் தற்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் தனித்தனி அணியாகச் செயல்படுவதால், இதுவே அதிமுகவின் மிகப்பெரிய பிளவாகப் பார்க்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த அதிமுகவைக் கொண்டு இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். ஆனால் அதே அதிமுக இன்று நான்காகப் பிரிந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று(டிச.5) முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய நான்கு பேரும் தனித்தனியாக ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பிறகு நான்கு பேரும் தனித்தனியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில் அனைவரின் பொதுவான கருத்தாக "மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்" என்ற உறுதி மொழி அமைந்தது. இதை உறுதி ஏற்றாலும் நான்கு அணியாகப் பிரிந்திருக்கும் அதிமுகவால் எப்படி வெற்றியைச் சாத்தியமாக்க முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது.

இது குறித்து நம்மிடையே பேசிய அரசியல் ஆய்வாளர் மார்க்ஸ்,"கடந்த காலங்களில் ஒரு இயக்கம் கொள்கை சார்ந்து இயங்கியது. ஆனால் தற்போது தனிநபர் கட்சியை இயக்குவதால் இது போன்ற பிளவுகள் ஏற்படுகிறது. சர்வாதிகாரமான தலைவர்கள், தலைவி இல்லாததே, இது போன்ற பிளவுக்குக் காரணம். கொள்கை சார்ந்து இயங்கக்கூடிய கட்சியில் கொள்கையில் முரண் ஏற்பட்டுப் பிளவுபட வாய்ப்புள்ளது. அதிமுகவைப் பொருத்தவரை யார் பதவியில் இருப்பது என்ற போட்டி இருப்பதால் அது பிளவை நோக்கித் தான் நகரும்" கூறினார்.

இதையும் படிங்க:இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் நினைவு நாள் இன்று

Last Updated : Dec 6, 2022, 2:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details