சென்னை: எஸ்.பி.வேலுமணி பாஜகவில் இணையப்போவதாக பொய்யான செய்தியை வெளியிட்ட யூடியூப் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக ஐடி விங் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (நவ.21) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரான எஸ்.பி. வேலுமணி பாஜகவில் இணையப்போவதாக பொய்யான செய்தியை வெளியிட்ட 'தினசேவல்' என்ற யூடியூப் சேனலின் உரிமையாளர் கண்ணன் கிருஷ்ணன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் சிங்கை ராமசந்திரன், காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த 19ஆம் தேதி, தினசேவல் வலைதளத்தில் துணை முதலமைச்சர் பதவி; பாஜகவில் இணையும் எஸ்.பி.வேலுமணி; எடப்பாடிக்கு குட்பை என்ற தலைப்பின் கீழ் வீடியோ ஒன்றை பதிவிட்டதோடு, அதில் அதிமுக மூழ்கும் கப்பல் என்பதால் எஸ்.பி.வேலுமணி அடுத்த மாதம் ஆதரவாளர்களுடன் இணைந்து பாஜகவில் இணையப்போவதாக உண்மைக்கு புறம்பான தகவலை பதிவிட்டுள்ளதாகவும்’ அவர் தெரிவித்தார்.