சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதற்கிடையே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது இபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் ஓபிஎஸ்ஸை தலைமை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்காமல் அங்கிருந்த கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். முன்னதாகவே ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் "சாமி" திரைப்பட பாணியில் ஏற்கனவே கட்டை மற்றும் கற்களை தயார் நிலையில் வைத்திருந்ததால் மாறி மாறி ஒருவரையொருவர் கற்களை கொண்டு தாக்கிக்கொண்டனர்.
மேலும் அந்த பகுதியில் அதிமுக கொடி அணிந்த கார்கள் மற்றும் பேருந்துகளின் கண்ணாடிகளை கற்களால் அடித்து நொறுக்கினர். அதிமுக தலைமை செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இபிஎஸ்ஸின் படம் கிழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மொத்தம் 12 அதிமுகவினர் மற்றும் 2 காவலர்கள் காயமடைந்தனர்.
ஆயிரம் விளக்கு அதிமுக பகுதி செயலாளர் பாசறை சந்திரசேகர் உட்பட 14 அதிமுகவினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடைகள் மூடப்பட்டு போர்க்களமாக மாறியது. இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் தலைமை கழகத்தை கைப்பற்றினர்.
அந்த பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்ததால் மயிலாப்பூர் துணை ஆணையர் தீஷா மிட்டல் மற்றும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே காயம்பட்ட அதிமுகவினர் ராயப்பேட்டை போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் கலவரத்தை தூண்டுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக தடுத்தல், மனித உயிருக்கு ஆபத்து விளைவிப்பது, பெண்ணை கண்ணிய குறைவாக நடத்துவது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துகள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.