சென்னை:ராயபுரம் தொகுதி தங்கசாலை பகுதியில் திருமலை திருப்பதி திருக்குடை விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , “திமுக என்றாலே பொய்தான். பொய் சொல்வது மட்டுமே இவர்கள் வேலை. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90-95 சதவீதம் பணி முடிந்து விட்டதாக பொய் கூறுகின்றனர். மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் எல்லாம் மழை நீர் தேங்கியுள்ளது.
தேங்கியுள்ள மழை நீரில் கொசுக்கள் உற்பதியாவதால் டெங்கு, ப்ளூ போன்ற காய்ச்சல்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையிலேயே நிலைமை இவ்வாறு உள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில், போர்கால அடிப்படையில் பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால், நடப்பு ஆட்சியோ பணிகளை முடிக்காமல் கால தாமதம் செய்து வருகின்றனர்.
எங்கள் ஆட்சியில் 'வொர்க் மோர்', 'டாக் லெஸ்' என்பதுதான். ஆனால், இந்த ஆட்சியை பொருத்தவரை 'டாக் மோர்', 'ஒர்க் லெஸ்' ஆக இருக்கிறது. இந்த ஆட்சியில் பொய், பித்தலாட்டம் அதிகமாகிவிட்டது.
எழில் மிகு சென்னை என ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பல நன்மைகளை செய்தார். ஆனால், இவர்களோ சிங்கார சென்னையை, ‘டெங்கு சென்னை’, ‘காலரா சென்னை’, ‘ஃப்ளூ சென்னை’ என்று மாற்றிவிட்டனர். என்ன தான் ஆனாலும் கோபுரம் கோபுரம் தான் குப்பை குப்பை தான்.
போஜராஜன் பாலம் கட்டும் பணியை எங்கள் ஆட்சியில் தொடங்கி 50 சதவீதம் நிறைவு செய்திருந்தோம். இதனை கூட முழுமையாக நிறைவு செய்யாமல் அப்படியே விட்டு விட்டார்கள். இது ஒரு சாடிஸ்ட் அரசாங்கம்.