சென்னை:“கரோனாவின் தாக்கம் முடிவதற்குள் ஆண்டுதோறும் சொத்துவரி உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தல் என மக்கள் விரோதச் செயல்கள் தான் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என ஓ. பன்னீர் செல்வம் கண்டித்துள்ளார்.
ஓராண்டு ஆட்சியில் சொத்துவரி உயர்வு: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது" எனத் தேர்தலில் வாக்களித்த திமுக, கரோனாவின் தாக்கம் முடிவடையாத நிலையில், ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் சொத்து வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் மன்றத் தீர்மானங்கள் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள் சொத்து வரியை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்யும் சட்டமுன்வடிவினை திமுக அரசு நிறைவேற்றியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்த வழிவகை செய்யும் சட்டமுன்வடிவிற்கு அறிமுக நிலையிலும், பரிசீலனை நிலையிலும் அனைத்திந்திய அதிமுக எதிர்ப்புத் தெரிவித்திருந்தும், அதனைப் புறந்தள்ளிவிட்டு மேற்படி சட்டமுன்வடிவு இயற்றப்பட்டதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதான் திராவிட மாடலோ:எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக, தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மன்றங்களால், தீர்மானத்தின் மூலம் அவ்வப்போது, அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும்.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வீதங்களுக்குள் சொத்து வரியினை உயர்த்த வழிவகை செய்துள்ளது எவ்விதத்தில் நியாயம்? இவ்வாறு செய்வதன் மூலம், சொத்து வரி உயர்வு பற்றி மக்கள் கேள்வி கேட்டால் உள்ளாட்சி அமைப்புகள் மீது பழியை போட்டு விடலாம் என்று திமுக அரசு நினைக்கிறது போலும்! ஒருவேளை இதுதான் திராவிட மாடலோ என்னவோ!
ஏழை-எளிய மக்கள் பாதிப்பு: அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்தாலும் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் இருக்கின்ற சலுகைகளை, திட்டங்களை முடக்குகின்ற அரசாக இருக்கிறது.