தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்" - உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு எதிராக அதிமுக வழக்கு!

AIADMK: தவறான செய்திகளை கண்டறிவதற்காக "உண்மை சரிபார்ப்பு குழு" அமைத்த தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு எதிராக அதிமுக வழக்கு
உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு எதிராக அதிமுக வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 9:11 PM IST

சென்னை:அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்டமாக அமலாக்கத் துறையின் கீழ் “உண்மை சரிபார்ப்பு குழு” ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இந்த குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்கக் கோரி, அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட கோவையைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை கண்காணிப்பதற்காக, அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டுமென தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்பின்னர், சமூக வலைதளங்களில் தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பகிரப்படுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க, சமூக ஊடக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்ததை ஏற்று, கடந்த மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மற்றொரு வழக்கை முடித்து வைத்தது.

ஆனால், இந்த சமூக ஊடக பிரிவு காவல்துறையின் வரம்பிற்கு உட்பட்டது அல்ல. காவல்துறையின் வரம்பிற்கு வெளியே "உண்மை சரிபார்ப்பு குழு" என தனியாக ஒன்றை அரசு அமைத்துள்ளது. இதில் ஆளுங்கட்சி ஆதரவாளரான ஐயன் கார்த்திகேயனை திட்ட இயக்குனராகவும் நியமித்துள்ளது.

ஆளும்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் அவருக்கு, மாதத்திற்கு 3 லட்ச ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது, அரசின் எந்த உயர் அதிகாரிக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு உள்ள இந்த நியமனம், அரசு கருவூலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இது குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டும் அல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி. காவல்துறையின் வரம்பிற்கு வெளியே இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தது.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்து உள்ளது. எனவே, அக்டோபர் 6ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்கவும், திட்ட இயக்குனராக ஐயன் கார்த்திகேயன் செயல்பட தடை விதிக்க வேண்டும்” என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:"பெண் என்பதால் காங்கிரஸ் எம்பி‌ ஜோதிமணியை விட்டு வைக்கிறேன்" - அண்ணாமலை ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details