சென்னை:வருகிற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை முடுக்கி விடத் தொடங்கி உள்ளன. அந்த வகையில், அதிமுகவும் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தி உள்ளது. இதனிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசை எதிர்த்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன.
முக்கியமாக, பாஜக உடன் கூட்டணியில் இருந்த அதிமுக, கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இது தற்காலிக பிரிவுதான் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், அதிமுக பிரமுகர்கள் பாஜகவையும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 13 அன்று, சென்னையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் வைத்து இன்று (அக்.17) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, அதிமுக தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், வருகிற 17.10.2023 செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு, சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல்; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இன்று அதிமுகவின் 52வது தொடக்க விழா என்பதால், தொண்டர்கள் பலரும் கட்சித் தலைமையகம் முன்பு கூடி உள்ளனர்.
முன்னதாக, அதிமுக தலைமையகத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் 52வது தொடக்க விழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு இருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கிய ஈபிஎஸ், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதையும் படிங்க: “விளையாட்டில் சாதி, மதம் தலையிடக் கூடாது” - வைகோ கருத்து!