சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கடந்த ஏப்.26 ஆம் தேதி சந்தித்தார். இந்த சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டர். இதில், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசியதாக தகவல் வெளியாகியது.
பாஜக - அதிமுக இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் இந்த சந்திப்பில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அரசியல் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது முதல் நீதிமன்றங்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-க்கு தொடர் தோல்விகளே கிடைத்தது. எப்படியாவது பாஜக டெல்லி மேலிடம் அதிமுகவில் மீண்டும் தலைமை பொறுப்பில் அமர்த்தி விடும் என்று நினைத்த ஓபிஎஸ்க்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
தற்போதும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டின் தான் ஓபிஎஸ் பயணம் செய்கிறார். அதற்கு சிறந்த உதரணமாக அமைந்தது ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல். இதில், எடப்பாடி பழனிசாமி முதலில் வேட்பாளரை நிறுத்தினார். ஆனால், பாஜக வேட்பாளரை நிறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். 2017ஆம் ஆண்டு அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் பிரிந்த போது மீண்டும் இணைத்து வைத்தவர் பிரதமர் மோடி என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
அப்போது, துணை முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என பிரதமர் மோடி கூறியதால் ஒப்புக்கொண்டேன் எனவும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான பிரச்சனை தொடங்கிய போது ஓபிஎஸ் அணியா? ஈபிஎஸ் அணியா? என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் பொதுவாகவே பாஜக செயல்பட்டது. பல முறை ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க நேரம் கேட்ட போது மறுக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிமன்றங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதமான தீர்ப்பு வந்ததால், அது ஓபிஎஸ் தரப்பிற்கு பின்னடைவாக அமைந்தது. இறுதியாக கர்நாடகா தேர்தலை மையமாக வைத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகாரம் பெற்றார். அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகாரம் பெற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்தனர்.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுகவிற்கு 20 தொகுதிகள் எனவும் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் எனவும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பாஜக சார்பில் 9 தொகுதிகளில் போட்டியிட விரும்பம் உள்ளதாகவும் பாஜக தலைவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. குறிப்பாக தென்சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபிக்க கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினார். போதிய அளவிற்கு கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து பல இடங்களில் இதைவிட பெரிதாக மாநாடு நடத்தப்படும் எனவும் தமிழகம் முழுவதும் மக்களை தேடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.