சென்னை: அதிமுக, தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது அண்ணா திமுகவுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
பாமகவைப் பொறுத்தவரையில், அதன் நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவந்த நிலையில், இப்போது உள் ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்.
மேலும், இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், அரசு அவ்வாறு செய்ய தாமதமானால் பாமக செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தக் கட்ட முடிவை எடுக்கும் என்று அதிமுக வுக்கு எச்சரிக்கை விடுத்தார். எனினும், இதுபற்றி ஆளும் அதிமுக அரசு இதுவரை பதில் அளிக்காத நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதேபோல, புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் ஆகிய இருவரும் குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இவர்களது கோரிக்கைகளை ஏற்று அரசாணைக்கு பரிந்துரைக்கப்படும் என்று அறிவித்தார்.
எனினும், இந்தக் கோரிக்கை மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால், மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இல்லையெனில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகி விடுவோம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரான, ஜஸ்டின் திரவியம், "எங்கள் கட்சி, தொடர்ந்து பல வருடங்களாக தேவேந்திர குல வேளாளர் அரசாணையை வெளியிட வலியுத்தி வந்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு இது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அரசாணை விரைவாக வெளியிடப்படும் என்று நம்புகிறோம்," என்றார்.