சென்னை: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ராணுவத்தில் சேர்வதை கனவாகக் கொண்ட இளைஞர்கள் நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிகாரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அதேநேரம், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ரயில்கள் தீ வைக்கப்பட்டன. இதனால், நேற்றைய தினம் 200 ரயில் சேவைகளை முடக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதை முன்னிறுத்தி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக சென்னைக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்களை தீவிரமாக கண்காணிக்க சென்னை காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், பிறமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு போராட்டம் நடத்தும் எண்ணத்துடன் வரும் இளைஞர்களை தடுப்பதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.