தேசிய ஊரடங்கால் ஒரு மாதத்துக்கும் மேலாக பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் மூலம், அரசுப் பேருந்துகளுக்கு அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கூறியதாவது, "மே 3ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறவுள்ள நிலையில், பேருந்துகள் பகுதியளவோ, முழுமையாகவோ இயக்க அனுமதி அளிக்கப்பட்டால், உடனடியாக இயக்க தயாராக உள்ளோம்.
ஒவ்வொரு பேருந்தும் தொழில்நுட்ப பணியாளர்களால் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறது. நீண்ட நாள்கள் பேருந்துகள் ஓடாமல் இருந்தால், பழுது ஏற்பட வாய்ப்பு அதிகம். பேருந்துகளை டெப்போ வளாகத்துக்குள்ளேயே இயக்கி, டயர்கள், பேட்டரி போன்றவை பராமரிக்கப்படுகின்றன.
பேருந்துகள் இயக்கப்பட்டால், மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் தகுந்த இடைவெளியைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்று முதல் இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு, இதற்கென வட்டங்கள் போட்டு நிற்க வேண்டும்.
பேருந்துகள் இயக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இருப்பினும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கச் செய்வதில், காவலர்கள், தன்னார்வலர்களின் பங்கு அவசியமானதாக இருக்கும். கிராமங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்" எனக் கூறினர்.