சென்னை: இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். எதார்த்தமான படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர். இவர் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இவரது நடிப்பில் தமிழ்க் குடிமகன் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இவரது தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப், பொக்கிஷம் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களாகும்.
இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் சேரன். ஆனால் இந்த முறை கன்னட படத்தை இயக்குகிறார். கன்னட நடிகர் கிச்சா சுதிப் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் அதன் பிறகு அவரது நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படம் வெளியானது. தற்போது தமிழ்க் குடிமகன் படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இவர் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்பை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ள செய்தி திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.