சென்னை:நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கனமழையின் எச்சரிக்கை காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (19-06-2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 200 ஆண்டுகளில் 150 மி.மீ. வேறு எந்த ஆண்டும் இதுபோன்ற மழை பெய்யவில்லை. ஜூன் மாத கனமழை மிகவும் அரிதானது. 3வது முறையாக ஜூன் மாதத்தில் பெய்த மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்சென்னை மற்றும் சென்னையின் வேறு சில பகுதிகளிலும் 150 மி.மீ. அளவு மழைப் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பெய்த கனமழை காரணமாக துபாய், தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்ட 17 பன்னாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன.
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மீனம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், நந்தனத்தில் அதிக பட்சமாக 12 செ.மீ மழையும், செம்பரம்பாக்கம் 10.7 செ.மீ மழையும், குன்றத்தூர் 8.8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.