சென்னையில்சீர்மிகு பல்கலைக்கழக அதிகாரமளித்தல் குழுவின் தலைவர் என். கோபால சுவாமி ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு சிறப்புப் பேட்டியளித்திருக்கிறார். அதில்அவர் கூறியதாவது, 'பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளிநாட்டுப் பேராசிரியர்கள் நியமனம், வெளிநாட்டு மாணவர் சேர்க்கை, புதிய பாடத்திட்டம் போன்ற அனைத்திற்கும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இதைத் தவிர்க்கும் வகையிலும், நமது மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களை உலக அளவில் தரம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக சர்வதேச அளவில் 500-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் அதிக அளவில் பல்கலைக்கழங்கள் இருந்தாலும், சர்வதேச அளவிலான தரவரிசைப் பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே இந்தியாவில் 20 பல்கலைக்கழகங்களுக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்தினை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து பெரும் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படத் தேவையில்லை.
ஆனால், சீர்மிகு பல்கலைக்கழகத்தின் அதிகாரமளித்தல் குழுவின் ஆய்வின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட முடியும்.
இதில் முக்கியமாக வரைமுறையில் சிலவற்றை எளிதாக்கி உள்ளோம். 10 ஆண்டிற்குள் உலக தரவரிசைப் பட்டியலில் 500 இடங்களுக்குள் வர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தேர்வாகும் பல்கலைக்கழகளுக்கு சில சுதந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தியாவில் 10 அரசு மற்றும் 10 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 30 பல்கலைக்கழகங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.