திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, இணைப்பு விதிகளை மீறியதாக அண்ணா பல்கலைக்கழகம் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இணைப்பு விதிகளின்படி அண்ணா பல்கலைக்கழகம் அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது. அதனால் வழக்கை தள்ளுபடி செய்வதாக கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுபோல அபராதம் விதிக்க அண்ணா பல்கலைக்கழகம் விதிகளின்படி அதிகாரமே இல்லை. இதுகுறித்து முன்னதாகவே உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது என வாதிட்டார்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.பி.சண்முகசுந்தரம், மனுதாரர் கல்லூரி மற்றும் பிற கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் அபராதம் விதித்துள்ளது. கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பு ரத்து செய்தால் மாணவர்களின் நலன் பாதிக்கும் என்பதால் அபராதம் விதித்த பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை சரியானது என்று தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். இந்த தீர்ப்பில் தலையிட வேண்டியது இல்லை. அதனால் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக விதிகளின்படி, இணைப்பு கல்லூரிகள் விதிகளை மீறினால் அதன்மீது மாற்று நடவடிக்கையாக, அபராதம் விதிக்க பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.
இருந்தாலும் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழகம் தரப்பு அவகாசம் கேட்பதால், விசாரணையை வருகிற ஆகஸ்டு 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அந்த பதில் மனுவில் அபராதம் விதிக்க சட்டப்படியான விதிகளின்படி அதிகாரம் உள்ளதா? என்பதை விளக்க வேண்டும். அதேநேரம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.