மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தார். அதில், "தமிழ்நாட்டில் கரோனாவால் 64 ஆயிரம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 230 வழக்கறிஞர்கள் கரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர்.
கரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள், நீதித்துறை அலுவலர்கள், பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது.
ஆனால் வழக்கறிஞர்கள், கிளார்க்குகளின் குடும்பத்தினருக்கு எந்த நிதியுதவியும் அறிவிக்கப்படவில்லை. எனவே, இவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, ஒன்றிய, தமிழ்நாடு அரசு, இந்திய மற்றும் மாநில பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: இந்து தெய்வங்கள் குறித்து அருவருப்பு கருத்து: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிற்கு நோட்டீஸ்