சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிட்டு தடுப்பு பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், விசாரணைக்கு அறநிலையத்துறை மற்றும் பிற துறைகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
சிலை கடத்தல் வழக்கில் மற்றொரு மனுதாரரான யானை ராஜேந்திரன், சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் குற்றஞ்சாட்டிய இரண்டு அமைச்சர்களின் பெயர்களையும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.