2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக அப்போதைய திமுக அரசு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தேச துரோக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், வைகோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது.
இதனால் அவர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்ற குழப்பம் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய திமுக வழக்கறிஞர் கண்ணதாசன், “இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வைகோவுக்கு 124 ஏ பிரிவின் படி ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது
உடனடியாக அபராதத் தொகையை செலுத்திய அவர், தண்டனையை நிறுத்தி வைக்க மனுதாக்கல் செய்து, ஜாமீனில் வெளிவந்துள்ளார். மேலும், இந்த வழக்கில் அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார். இதனால் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் அவருக்கு எந்த சிக்கலும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.