சென்னை:சனாதன தர்மம், இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் சனாதன தர்மம் குறித்து கேள்விகளை கேட்டு உள்ளார். அதில், சனாதன தர்மம், இந்தியா முழுமைக்கும் பொருந்தும் என்று சமீபத்தில் ஆளுநர் பேசி உள்ளதாகவும், மேலும் சனாதன தர்மத்தைப் பற்றிய முழுத் தகவல் உங்களிடம் உள்ளது என்பது இதன் மூலம் தெளிவான நிருபணம் ஆகி உள்ளது என்றும், இது சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளார்.
இதையும் படிங்க: ரேசன் கடைக்கு வந்த தக்காளி - 1 மணி நேரத்தில் காலியானதால் மக்கள் ஏமாற்றம்
இதைத் தொடர்ந்து, சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா? என்றும் சனாதன தர்மத்தின்படி பிராமண சமூகமும், ஆதி திராவிடர் சமூகமும் சம அந்தஸ்தில் உள்ளனரா? அப்படியானால் சனாதன தர்மத்தின்படி பிராமண சமூகத்தினர், கழிப்பிடங்களில் துப்புரவு பணியாளர்களாக நியமிக்கப்படுவார்களா? என்று சராமாரியாக கேள்விகளை அடுக்கி உள்ளார்.